ஞாயிறு கொண்டாட்டம்

பழங்குடியின மக்கள்...  கல்லூரி மாணவர்கள்!

ரயில், பேருந்து, அரசு மருத்துவமனை, ஆட்சியர் அலுவலகம் இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்காதது மட்டுமல்ல... அவற்றைப் பார்க்காத

ஜெபலின்ஜான்

ரயில், பேருந்து, அரசு மருத்துவமனை, ஆட்சியர் அலுவலகம் இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்காதது மட்டுமல்ல... அவற்றைப் பார்க்காத மக்களும் இருக்கிறார்கள் என்று யாராவது சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேற நினைக்கும் இக்காலத்தில் இந்த விவரங்கள் கூடத் தெரியாத மக்கள் எப்படி இருக்க முடியும்? என்ற நியாயமான கேள்வி எல்லாரின் மனதிலும் எழும்.

  ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், பர்கூர், கடம்பூர் மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களில் பெரும் பகுதியினர் இதுபோன்ற நிலையில்தான் உள்ளனர். இவர்களைப் போன்ற பழங்குடி மக்களை மாதம் ஒருமுறை சந்தித்து அங்கேயே முகாம் அமைத்து தங்கி அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்து  வருகின்றனர் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள்.

 பழங்குடி நலக் குழு என்னும் பெயரில் இக்கல்லூரியில் இயங்கும் அமைப்பு, நாட்டு நலப்பணித் திட்டம், மகளிர் மேம்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் மூலமாக மாதம் ஒருமுறை மலைப் பகுதிக்குச் சென்று அங்கேயே தங்கி, பழங்குடி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

 பழங்குடியின மக்கள் வாழும் இடங்களில் அவர்கள் வாழும் இயற்கைச் சூழ்நிலையிலேயே மாணவ, மாணவிகள் தங்கி இரவு நேரங்களில் குறும்படங்கள், தெரு நாடகங்கள் மூலமாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் இங்கு மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது.

 இளம் வயதுத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை, கல்வியின் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து பழங்குடியின மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.  இதுபோன்ற விழிப்புணர்வால் இப்போது இளம்வயதுத் திருமணம், குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

 ""ஒருமுறை வீடு, வீடாக ஆய்வுக்குச் சென்றபோது, படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்ட 7-ஆம் வகுப்பு மாணவி ஒருவரைக் கண்டறிந்து அவரை மீண்டும் பள்ளியில் சேர்த்தது ஒரு நெகிழ்ச்சியான அனுபவம்'' என்கிறார் 4 ஆண்டுகளாக மலையில் விழிப்புணர்வுப் பிரசாரத்துக்குச் சென்று வரும் இக்கல்லூரி மாணவர் எஸ்.பிரபு. மேலும், 30-க்கும் மேற்பட்ட இளம்வயது திருமணங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கிறார் அவர்.

  ""மலைப் பகுதிகளில் உள்ள இளம் பெண்கள் சிலரைத் தேர்வு செய்து கல்லூரிக்கு அழைத்து வந்து தையல் பயிற்சி அளித்ததுடன் தையல் இயந்திரமும் இலவசமாக அளித்துள்ளோம். இப்பயிற்சி பெற்ற பெண்கள் இப்போது சுயதொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப் பார்த்த மேலும் பல பழங்குடியினப் பெண்கள் தங்களுக்கும் பயிற்சி அளிக்கும்படி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அடுத்த கல்வி ஆண்டில் இதுபோன்ற பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலமாக அவர்களின் வாழ்க்கைத்தரம் மாறி வருகிறது'' என்கிறார் இக்கல்லூரி மாணவி சி.சுபாஸ்ரீ.

மலைப் பகுதிகளில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வருபவரும், இக்கல்லூரியின் செயலருமான எஸ்.சிவானந்தன் கூறும்போது, ""பொறியியல் கல்லூரிகளில் பயிலும் வசதி படைத்த மாணவ, மாணவிகளுக்கு கிராமங்கள் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆனால், மலைப் பகுதிகளில் வாழும் இதுபோன்ற பழங்குடி மக்களுடன் நேரடியாகச் சந்தித்துப் பழக வாய்ப்பு கிடைத்திருக்காது. முதல் முறையாக அழைத்துச் செல்லும்போது ஏதோ சுற்றுலா செல்வது போன்ற மனநிலையில் வரும் மாணவ, மாணவிகள் பழங்குடியின மக்களுடன் ஒன்றிவிடுகின்றனர்.

 பர்கூர் மலைப் பகுதியில் ஜியான்தொட்டி முதல் கொங்காடை வரை 2 கி.மீ. தூரத்துக்கு சாலை வசதி இல்லாமல் இருந்தது. எங்கள் கல்லூரி மாணவ, மாணவிகளே நேரடியாகக் களத்தில் இறங்கி மண் சாலை அமைத்துக் கொடுத்தனர். இப்போது அங்குள்ள பழங்குடி மக்கள் தங்களது வேளாண் விளைபொருள்களை எளிதில் எடுத்துச்செல்லவும், அவர்களின் போக்குவரத்துக்கும் இச்சாலை மிகவும் பயன்படுகிறது.

 கிணறு வெட்டுதல், கூரையால் வேயப்பட்ட பள்ளி வகுப்பறைகளில் கூரைகளை அகற்றிவிட்டு தகடுகளை அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், குளம், குட்டைகளைத் தூர்வாருதல் உள்பட பல நலப்பணிகளை மாணவ, மாணவிகள் 3 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.

 பொறியியல் படிப்புடன் இதுபோன்ற நலப்பணிகளில் ஈடுபட்டு படித்து முடித்து வெளியேறும் மாணவ, மாணவிகளிடம் குழுவாக செயல்படும் மனப்பாங்கு, சமுதாயத்துக்கு தொண்டாற்றும் கடமை உணர்வு அதிகரித்துள்ளதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT